Sunday 6 May 2012

கபடி...கபடி......கக்கக்கபடி...கபடி




கபடி கபடி என உச்சரிக்க தொடங்கும்போதே கடந்து போன வருடங்களுக்குள் கலையாத நினைவுகளாய் இன்னும் இருக்கு கிராமங்களுக்குள் நடக்கும் வரலாற்று போர்களாய் கபடி .


எனக்கும் கபடிக்கும் என்ன தொடர்பு இருக்கு என நீங்க நினைத்தால் அது ஆள் பற்றாக்குறைக்கு இறங்கும் துணை ஆளாக மட்டுமே கபடி போட்டியில் இறங்கி இருக்கிறேன் .எப்பொழுதும் கபடி விளையாடும் எங்கள் ஊர் கபடி விளையாட்டு வீரர்களுக்கு துணிகளை பாதுகாத்து வைக்கும் பாதுகாவலனாய் எல்லா கபடி போட்டிகளுக்கும் போய் வந்து இருக்கிறேன் .


இன்று தேசிய விளையாட்டு ஹாக்கியா ,கிரிக்கெட்டா என கேட்டால் ஹாக்கியை மறந்துவிடும் சமூகத்துக்குள் இன்று கபடியை சொன்னால் கில்லி படத்திலும் ,வெண்ணிலா கபடிக்குழு படத்திலும் கபடியை பார்த்துவிட்டு அதுதான் கபடி என நினைத்துக்கொண்டு இருப்போம் .முன்பு கபடி விளையாடபோனால் கபடி மட்டுமே அல்ல அதையும் தாண்டி நிறைய இருந்தது கிராமத்து கபடி போட்டியில் .


ஒரு கிராமத்தில் கபடி நடக்குது என்றால் அது பெரும்பாலும் சனிக்கிழமை இரவுகளில் ஆரம்பம் என நோட்டிஸ் அடித்து வெளியாக்கி இருப்பார்கள் .எனக்கு விவரம் தெரிந்த வயதில் முன்னூற்றி முப்பத்து மூன்று ருபாய் முதல் பரிசாக இருந்தால் அது பெரிய பரிசு .நுழைவுக்கட்டணம் பதினொரு ரூபாயாக இருக்கும் .



எங்கு கபடி நோட்டிஸ் ஒட்டி இருந்தாலும் யாரவது பார்த்து வந்து சொல்லிவிடுவார்கள் இந்த ஊரில் கபடி நடக்குது என .கபடிக்கு ஒரு வாரம் முன்பே எங்கள் ஊர் பள்ளி திடலில் காலையிலும் மாலையிலும் பயிற்சி விளையாட்டு விளையாட ஆரம்பித்து விடுவோம் அணி பிரித்து .கபடி நடக்கும் அன்று இரவு எழு மணிக்கு எங்கள் ஊரை விட்டுகிளம்புவோம் சைக்கிள் டயரை வெட்டி கொளுத்தி கையில் பிடித்துக்கொண்டே .டயர் பற்றி எறிந்தால் அவ்வளவு சீக்கிரம் அமந்து விடாது .


கபடி நடக்கும் ஊரை சென்று அடைந்தால் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்துகொண்டு இருப்பார்கள் .வெளியூர்களில் இருந்து வந்து இருக்கும் அணிகளை பதிந்து நுழைவுக்கட்டணம் கட்டுங்கள் என .சில அணிகள் பெயரை மட்டும் பதிந்துவிட்டு நுழைவுக்கட்டணம் கட்டாமல் காலதாமதம் செய்வார்கள் .வந்து இருக்கும் சில அணிகள் தங்கள் அணியை இரண்டு குழுவாக பதிவர்கள் .கடைசி நேரத்தில் ஒரு அணியை கேன்சல் செய்துவிடுவார்கள் .


சில குழுக்கள் வெளியில் நட்பாக இருந்தாலும் கபடி என்று வந்துவிட்டால் பரம எதிரியாக இருப்பார்கள் .அவர்களில் யாரவது ஒரு குழு கபடி நடத்தும் அமைப்பினரிடம் எங்களோடு முதல் ரவுண்டில் இந்த அணியை போடுங்கள் என கேட்பார்கள் .அப்படி கேட்டு வாங்கி முதல் ரவுண்ட் நடந்தால் அந்த விளையாட்டில் பொறி பறக்கும் .பார்க்கும் பார்வையாளர்களுக்கும் மிக சந்தோசமா இருக்கும் .


எங்கள் ஊரில் இரண்டு கபடி  அணிகள் இருந்தன .ஒரு அணியின் பெயர்  இளைஞர் மன்றம் , இன்னொரு அணியின் பெயர் முத்தமிழ் கபடிக்கழகம்.இரண்டில் ஒரு அணி எங்காவது சென்று பரிசு வாங்கி வந்துவிடுவார்கள் .இளைஞர் மன்றம் பின்பு செவன் ராபின்ஹூட் என பெயர் மாறியது ,காரணம் அப்பொழுது நான் சிகப்பு மனிதன் படம் வெளியாகி இந்த ராபின்ஹூட் பெயர் பிரபலமாக இருந்தது .இதே போல ராஜேந்தர் ஒரு படத்தில் தனது பெயரை சூலக்கருப்பன் என வைத்து இருப்பார் .அந்த பெயரை இடயன்காடு சூலகருப்பன் என தங்கள் ஊரோடு சேர்த்து வைத்து அணியின் பெயரை கூப்பிட்டார்கள் .




எங்கள் ஊரை சுற்றி இருந்த அணியின் பெயர்கள் முன்பு இப்படி இருந்தன. முதுகாடு வானவில் ,அறந்தாங்கி செவன்புல்லட். அரசர்குளம் ஏ எஸ் சி, அரசர்குளம் செவன் லயன்ஸ் .மணக்காடு கபில் தேவ், வீரியன்கோட்டை வெண்புறா என நினைவில் நின்ற அணிகள் நிறைய .
என் நினைவில் நிற்கும் புகழ் பெற்ற வீரர்கள் கஸ்டம்ஸ் அலி . திருமயம் அப்பாதுரை , பழுக்காடு கணேசன் , மணக்காடு சூசை ராஜ். அரசர்குளம் அக்கு வீட்டு ராஜ் . அரசர்குளம் மதி . கொடிவயல் செல்வம் . அறந்தாங்கி காளையன், வீரியன்கோட்டை சடகோபன்  .மங்களநாடு ராஜாமுகம்மட், மங்களநாடு ஜபருல்லா , ஒக்கூர் ஆசைத்தம்பி, இடையங்காடு தாஜ்  என நிறைய .இவர்கள் சிலர் இன்று பெரிய பதவிகளில் இருக்கிறார்கள் .சிலர் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை .


முன்பு கபடி நடக்கும் கிராமங்களில் பெண்களும் விளையாட்டை பார்க்க வருவார்கள் .சில விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் மனதிற்கு பிடித்த தாவணியும் வந்து இருந்தால் அவரின் ஆட்டத்தை பார்க்கவேண்டுமே .தன் மனதுக்கு பிடித்த பெண் பார்க்கிறாள் என்பதற்காகவே ஆட்டத்தின் ஸ்டைலே வேறு மாதிரி இருக்கும் .விடிந்தும் கபடி நடந்தால் அருகில் இருக்கும் எல்லா வீடுகளிலும் சாம்பார் சோறும் ,இட்லியும் வீரகளை அழைத்து சாப்பிட கொடுப்பார்கள் .இப்படி கபடி விளையாட போன வீரர்களுக்கு அதே ஊரில் சம்மந்தம் பேசி கல்யானங்களும் நடந்து இருக்கு .
இதே கபடியால் ஊர் பிரச்சினையாகி பஞ்சாயத்தில் கை கட்டி நிற்பதும் நடந்து இருக்கு .எப்படி இருந்தாலும் அதே சண்டைக்காரகள் இதே கபடியால் ஒன்று சேர்ந்தும் விளையாடுவார்கள் .


இன்று நீண்ட காலங்களுக்கு பின்பு எங்கள் ஊர் பக்கம் மறுபடியும் கபடி விளையாட்டு துளிர்த்து இருக்கு .கிரிக்கெட் மோகத்தால் காணாமல் போய்க்கொண்டு இருந்த கபடி மறுபடியும் நடக்க ஆரம்பித்து இருப்பதில் சின்ன மகிழ்வோடு இந்த பதிவு

1 comment:

  1. நண்பா!அழகான கடந்த கால நினைவுகள்!நானும் பார்வையாளன் மட்டுமே!உங்கள் ஊரு பகுதியில்-கை பந்து போட்டி பிரபல்யம்!கபடி!உண்மையிலேயே வீர விளையாட்டு!

    ReplyDelete