Monday 30 July 2012

காதலில் காத்திருத்தல் சுகமா? தவமா?.....




காத்திருத்தல் சுகம்
என்றார்கள் காதலில்
காத்திருத்தல் கடும்
தவம் என தெரியாமலே

================


உன் புன்னகைக்கு
விலையேதும் இல்லையென்றாலும்
என் புன்னகையை
ஈடாக ஏற்றுக்கொள்வாயா?

====================


மௌனம் ஒரு 

மொழியென நீ 
பெசாதபோதேல்லாம் 
அறிந்துகொண்டேன் நான்

=================

நினைத்தேன் வந்தாய்
என பொய் சொல்லமாட்டேன்
நினைக்காத போதெல்லாம்
வந்தாய்
===========================================================


Tuesday 24 July 2012

ஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....



பத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் என கேட்டார் .என்ன என்று கேட்டேன் .அவர் சொன்ன செய்தி என்னை மிக வியப்பில் ஆழ்த்தியது .அருவருப்பாகவும் இருந்தது .இப்படியும் இருக்கின்றாகளே மனிதர்கள் இவர்களை நாம் என்ன செய்வது? .

பேஸ்புக்கில் கொஞ்சம் நட்பு வட்டம் பெரிதாகவும் ஓரளவு படித்தவர்களுக்கு இடையில் நடந்த கதை இது .நல்ல சமூக கருத்துக்களை பதிபவர் அவர் .அவர் பதிவிடும் கருத்துக்ள் நன்றாக இருப்பதால் நண்பர்கள் வட்டம் பெரிதாக ஆகிறது .அடிக்கடி பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதால் நாளடைவில் போன் நம்பர்களை கொடுத்து பரிமாரிக்கொள்கிறார்கள்.அடிக்கடி போனில் பேசிக்கிறாங்க நண்பர்கள் அனைவரும் .இந்த நண்பரோடு சிலர் நேரில் ஒன்றாக கூடி பேசி அரட்டை அடித்து செல்கிறார்கள் .இது போல சந்தித்து பேசுவது அடிக்கடி நடக்கிறது .

இந்த நேரத்தில் இந்த நண்பரின் போனில் இருந்து ஒரு நண்பருக்கு அழைப்பு வருகிறது .நண்பர்தான் பேசுகிறார் என நினைத்து ஹலோ என சொல்கிறார் .எதிர் முனையில் பேசியதோ இவருக்கு அறிமுகம் இல்லாத பெண் குரல் .நண்பர் பதற்றம் அடைந்து நீங்க யார் என கேட்க நான் உங்க நண்பரின் மனைவிதான் பேசுறேன் என சொல்கிறார் .இந்த நண்பர் உங்க கணவர் எங்கே என கேட்க அவர் மனம் சங்கடமாக அறைக்குள் படுத்து இருக்கிறார் .அவருக்கு தெரியாமல் உங்களுக்கு போன் செய்கிறேன் என அந்த சொல்ல இவர் எதற்கு சங்கடம் என கேட்டு இருக்கிறார் .உடனே அந்த பெண் எங்கள் குழந்தைக்கு பள்ளியில் பணம் கட்ட முடியவில்லை .அதனால மனம் சங்கடப்பட்டு வீட்டிலேயே படுத்து இருக்கிறார் என்று சொல்லிவிட்டு போனில் உங்க நம்பரை பார்த்தேன் உங்களால் உதவி செய்ய முடியுமா என கேட்பதற்கு அவருக்கு தெரியாமல் போன் செய்கிறேன் .அவருக்கு தெரிந்தால் என் மீது கோபப்படுவார் என சொல்லி இருக்கிறார் .

நண்பர் அந்த பெண்ணிடம் எவ்வளவு கட்டவேண்டும் என கேட்டு இருக்கிறார் .இருபத்து ஐந்தாயிரம் என அந்த பெண் சொன்னதும் பெரிய தொகையாக இருக்கு என நினைத்துக்கொண்டு சரி பள்ளிக்கு கட்டதானே கேட்க்குறீங்க என கேட்டு இருக்கின்றார் .ஆமாம் என சொன்னவுடன் நண்பர் எந்த பள்ளி என கேட்டதற்கு அந்த பெண் ஒரு பள்ளியை சொல்லி இருக்கின்றார் .சரி நான் நாளைக்கு பணம் வாங்கிக்கொண்டு அந்த பள்ளிக்கு வருகிறேன் நீங்களும் வந்துவிடுங்க கட்டுவோம் என சொன்னதுக்கு பள்ளிக்கு நீங்க வரவேண்டாம் யாரவது பார்த்தால் தவறாக நினைப்பார்கள் என சொல்லி இருக்கின்றார் .சரி நான் உள்ளே வரவில்லை பள்ளிக்கு வெளியில் வைத்து பணம் தருகிறேன் நீங்க உள்ளே போய் கட்டிவிட்டு வாருங்கள் என சொன்னதுக்கும் வேண்டாம் நீங்க வெளியில் வேறு எங்காவது வைத்து கொடுங்கள் என சொல்லி இருக்கிறார் .சரி நான் நாளைக்கு பணம் வந்தவுடன் போன் செய்கிறேன் என சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

நண்பர் அலைபேசியை துண்டித்தவுடன் தனது வேறு ஒரு நண்பருக்கு போன் செய்து நடந்த விசயத்தை சொல்லி இருக்கிறார் .அங்கே அவருக்கு நண்பர் ஒரு அதிர்ச்சியான விசயத்தை சொல்லி இருக்கிறார் .அவங்க எனக்கும் போன் செய்து பணம் கேட்டாங்க .என்னிடம் இப்ப இல்லை ஒரு வாரம் சென்று தருகிறேன் என சொன்னேன் என்று சொல்லி இருக்கிறார் .இருவருக்கும் சிறிது சந்தேகம் .பள்ளிகூடத்துக்கு பணம் கட்டனும் என்று சொல்வது பொய்யாக இருக்குமோ என சந்தேகப்பட்டு அந்த பள்ளியில் போய் விசாரித்து இருக்கின்றார்கள் .அவங்க ஏற்க்கனவே எல்லா பணத்தையும் கட்டிமுடித்துவிட்டார்களே என பள்ளியில் சொன்னதும் இரண்டுபேரும் திரும்பிவிட்டனர் .இனிமேல்தான் இருவருக்கும் அதிர்ச்சி ஒன்று காத்து இருக்கு என்பது அறியாமலே வந்துவிட்டனர் .

முதல் நண்பர் அந்த பெண் பணம் கேட்டதை யார் என சொல்லாமல் நடந்த கதையை ஸ்டேட்டஸ் ஆக தனது முகப்பில் பதிந்து இருக்கின்றார் .அங்கே தான் நிறைய உண்மை வெளிச்சத்துக்கு வந்தது  மியுட்சுவல் நண்பர்களாக உள்ள கிட்டத்தட்ட பதினைத்து பேர் இதே பெண்ணிடம் இருப்பத்து ஐந்தாயிரம் ருபாய் குழந்தை படிப்புக்காக கொடுத்துள்ளார்கள் .எல்லோரிடமும் ஒரே கதைதான் .கணவருக்கு தெரியாமல் போன் செய்கிறேன் என .மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இருக்கின்றார்கள் .கணவன் சொல்லிகொடுத்தபடி மனைவி பேசி பணம் வாங்கி இருக்கிறார் .ஸ்டேட்டஸ் பின்னூட்டத்தில் எல்லோரும் கொட்டி தீர்த்துவிட்டனர் .

சமூக ஊடகத்தில் சமூக அக்கறை உள்ளவனாக பதிவுகள் போட்டு நல்ல பெயரோடு இருக்கும் ஒருவர் தனது மனைவியின் மூலம் நாடகம் ஆடி நம்பிக்கைக்கு உரிய நண்பர்களிடம் மோசடி செய்ய எப்படி மனது வந்தது என தெரியவில்லை .இதை இங்கே எழுதிய காரணம் நம்மை நம்பிக்கைக்கு உள்ளாக்கி நம்மையே மோசடி செய்யவும் நண்பன் என்ற பெயரில் சிலர் கிளம்பி இருப்பதால் எழுதினேன் .எல்லோரிடமும் உங்கள் உண்மைகளை கொட்டி தீர்க்காதீர்கள்

நீயா நானா கோபியும், இளையராஜாவும்.............

இன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து இருந்தேன் .இந்த நிகழ்ச்சியை நடத்தும்போது அதிகபட்ச இடையூறு எதையும் செய்யாமல் வழிநடத்தினார் .

நிகழ்வில் கலந்துகொண்டோர் ஏறக்குறைய நாற்ப்பது வயதை கடந்தவர்கள் .எல்லோரும் மிக சிறப்பாக தங்கள் பங்களிப்பை செய்தனர் .அவர்கள் எல்லோருக்குள்ளும் காலங்கள் கடந்தும் பாடல்களால் தங்கள் இளமை காலங்களை மீட்டெடுத்து பாடல்கள் வழியாக பேசியது அவ்வளவு அருமையாக இருந்தது .

முன்பு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பாடல்கள் ஏதோ ஒரு வகையில் கலந்து இருந்ததை உணரமுடிந்தது .நானும் நாற்பதுகளில் இருந்தாலும் இந்த அனுபவங்கள் எனக்கும் இருந்தது .இங்கே அதை பற்றி ஒரு நோட்சே எழுதி இருக்கிறேன் .அது ஆனந்தவிகடனிலும் வந்தது .



கலந்துகொண்டவர்கள் தங்களை மறந்து பாடியபோது அது உணர்வுபூர்வமாக இருந்தது .அதை பார்த்த எனக்கும்கூட சந்தோசம் ஒட்டிக்கொண்டது .


அவர்கள் பாடிய பாடல்களை கேட்டபோது எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை .அந்த பாடல்களில் முக்கால்வாசி பாடல்களை நான் இங்கே முன்பு எடுத்து பகிர்ந்து இருக்கிறேன் .

இரண்டுநாட்களாக ஏதோ ஒருவகையில் மனசுமையில் இருந்த நான் இந்த நிகழ்ச்சி பார்த்தபோது என்னை மறந்து இருந்தேன் என்பது மட்டும் நிஜம்.

பார்க்காதவர்கள் நிச்சயம் பாருங்கள்












Monday 16 July 2012

பில்லா ஏன் இல்லை நல்லா....விமர்சனம் அல்ல சிறு பார்வை


இதை எழுதும் முன்பு நான் யோசித்துக்கொண்டு இருந்தேன் .படம் பார்க்கும் முன்பு முன்பு எதிர்மறையான கருத்துக்கள் எழுதுவது தவறோ என.....
ஆம் உண்மையில் தவறுதான் .எதையும் பார்ததபின்பே இனி எழுதுவது எனும் முடிவுக்கு வந்து இருக்கிறேன் .

முன்பு ஒரு சினிமா விழாவில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் பற்றி விமர்சனம் எழுந்தபோது எது நல்ல படம் எது கெட்ட படம் எனும் கேள்வி வந்தது .அதற்கு இயக்குனர் அமீர் அவர்கள் சொன்னார் நல்ல படம் கெட்ட படம் என எதுவும் கிடையாது .ஓடும் படம் ஓடாத படம் என்று சொல்லலாம் என்றார்.
ஓடும் ஒரு குதிரையின் மீதே பந்தயம் கட்டமுடியும் .அஜித் பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரை .ஜெயித்து இருக்கிறார் பில்லா இரண்டு படத்தில் .

இங்கே படம் எடுப்பவர்கள் யாரும் கலைசேவை செய்ய வரவில்லை .பணம் போட்டு பணம் எடுக்கவே வந்து இருக்காங்க .பில்லா படம் வெளியானவுடன் ப்ளாக்கரிலும் பேஸ்புக்கிலும் ஒரே அக்கபோர்.படம் சரியில்லை என...
நானும் கூட சரி இல்லை என்றே நினைத்து விட்டேன் .ஆனால் படம் பார்த்தபின்பே தெரிகிறது .படத்தில் குறைகள் இல்லை என [என்னால் படத்தில் நிறைய குறைகள் சொல்ல முடியும் .அப்படி சொல்லும் குறைகள் படத்தின் ஓட்டத்தை தடுக்கக்கூடிய வல்லமை உள்ளது இல்லை .திரைக்கதையில் ஆரம்பித்து நிறைய சொல்லலாம் .]

இவ்வளவு ஈடுபாட்டோடு அஜித் நடித்து இருப்பதற்கே ஒரு சபாஷ் போடலாம் .முதலில் தன் ரசிகனுக்காகவும் முப்பது வயதுக்கு கீழே உள்ள திரைப்பட ரசிகர்களுக்காகவும் பில்லா படம் எடுக்கப்பட்டு உள்ளது .படத்துக்கு செல்லும் ஏ கிளாஸ் ரசிகர் முதல் சி கிளாஸ் ரசிகர் வரை படம் போய் சேரனும் என்ற முடிவோடு திரைக்கதை லாஜிக் எதுவும் பார்க்கவில்லை  இயக்குனர் .

ஏற்கனவே நிறையப்பேர் கதையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பிச்சு மேய்ந்துவிட்டார்கள் .நிறையப்பேர் வசனங்களையும் எழுதிவிட்டார்கள் .அதனால அவற்றை எல்லாம் நான் பேசவில்லை .படம் பார்க்காதவர்கள் பார்க்கணும் என ஒரு சிறு மேலோட்டம் மட்டுமே இது .

படம் முழுவதும் சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நிறைய இருக்கு .பில்லா டான் ஆகுவது ஒரே நாளில் இல்லாமல் படிப்படியாக வருவதற்கு இந்த சிறிய கதாபாத்திரங்கள் உதவுகின்றன .

படத்தில் வளவளவென எங்கும் வசனம் இல்லை .மொத்த கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை பத்து பக்கத்துக்குள் அடக்கி விடலாம் .எழுத்தாளர் இரா.முருகன் ஜாஃபர் என்ற இன்னொருவருடன் சேர்ந்து வசனத்தை எழுதி உள்ளார் .

ஒளிப்பதிவு மிக அருமை .ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ..பார்க்கும் காட்சி நம்மை ஒன்ற செய்யவேண்டும் .அந்த வகையில் ஒவ்வொரு காட்சியையும் மிக அழகாக ஒளிப்பதிவு செய்து உள்ளார் .

இசை யுவன் கலக்கல் .பின்னணி இசை ஒரு கதாநாயகன் என சொல்லலாம் .படத்தோடு நம்மையும் கூடவே அழைத்து செல்கிறது பின்னணி இசை .

எடிட்டிங் சுரேஷ் அர்ஸ்.மிக அழகாக தொகுத்து உள்ளார் .திரைக்கதை தடுமாற்றத்தை இவரது கத்திரி சரிசெய்து உள்ளது .

சண்டைக்காட்சி ராஜசேகர் என நினைக்கிறேன் .அஜித் நடித்த சண்டை காட்சிகளில் பெஸ்ட் படம் இதுவென சொல்வேன் .பரபரவென இருக்கும் சண்டைக்காட்சி .அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் .



படத்தின் நாயகிகள் சில காட்சிகள் தலைகாட்டி செத்துபோய்விடுறாங்க .நாயகிகள் கேங்ஸ்டார் படங்களில் வருவதுபோல மிக உயரமானவர்களாக இருக்காங்க .சில வசனமும் சின்னதாய் சிரிப்பு மட்டுமே இவர்கள் நடிப்பு .

விஜய் படத்தின் தலைப்பு துப்பாக்கி என்பதாலோ என்னவோ இந்த படத்தில் அதிகமான துப்பாக்கிகள் நடிச்சு இருக்கு .ஒரு போட்டிகூட வைக்கலாம் இந்த படத்தில் எத்தனை துப்பாக்கிகள் பங்கெடுத்தன என்று .பில்லா ஒன்றில் கூலிங்கிளாஸ் என்றால் இந்த படத்தில் துப்பாக்கிகள் .

வில்லன்கள் நிறைய .சர்வதேச வில்லன்கள் ரெண்டுபேரும் உள்ளூர் வில்லன்கள் சில பெரும் நண்பர்கள் சில பெரும் படத்தில் தலையை காட்டி எல்லோரும் செத்து போயிடுறாங்க .படத்தில் மொத்தம் எத்தனைபேர் செத்தார்கள் என தனியாக ஒரு கணக்கெடுக்கலாம் .

எப்படி சொன்னாலும் அஜித் இந்த படத்தில் மாஸ்தான் .தன் ரசிகர்களின் நாடிபிடித்து நடித்து உள்ளார் .சிறு சிறு கண் அசைவிலும் உடல் அசைவிலும் அற்ப்புதமாக நடித்து உள்ளார் .படத்தில் போரடிக்குது என எதுவும் இல்லை .குறைகள் நிறைய இருந்தும் உங்களை யோசிக்கவிடாமல் சொல்லி அடிச்சு இருக்காங்க .

கடைசியாக ஒன்று நீங்க உலகப்படம் பார்ப்பவர் என்றால் படம் பார்க்க போகவேண்டாம் .இரண்டுமணிநேர பொழுது போகணும் என நினைத்தால் கண்டிப்பா இந்த படம் பாருங்க .நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்

Wednesday 11 July 2012

பில்லா-2 முந்துமா நான் ஈ திரைப்படத்தை?......



ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பதை நீங்க எதை வைத்து தீர்மானம் செய்வீர்கள் .அந்த படம் ஈட்டிக்கொடுக்கும் மொத்ததொகை வைத்து கணக்கிட்டு சொல்வீர்கள் .அப்படி கணக்கிட்டு நீங்க வெற்றி திரைப்படம் என சொன்னால் வெளியாகபோகும் பில்லா ரெண்டு மிகப்பெரிய வெற்றிப்படம் .ஏன் எனில் அதிகமான திரை அரங்கில் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்குள் போட்ட பணத்தை எல்லாம் பில்லா பெற்று தந்துவிடும் .



என்னை கேட்டால் நான் ஈ திரைப்படத்தோடு ஒப்பிடுகையில் பில்லா ரெண்டு மிகப்பெரிய தொல்விப்படம் என்பேன் இப்பொழுதே .ஏன் என நீங்க என்னிடம் கேட்கலாம் .நாம் கொஞ்சம் பின்னோக்கி பார்த்துவிட்டு அப்புறம் பில்லா ,நான் ஈ திரைப்படம் பற்றி பேசுவோம் .

தொன்னூறுகளில் படம் வெளியாகும்போது ஒரே நேரத்தில் நான்கைந்து படங்கள் வெளியாகும் .படம் வெளியாகும் இடங்களை ஏ,பி ,சி என மூன்று செண்டர்களாக பிரித்து இருப்பார்கள் .வெளியாகும்போது ஏ மற்றும் சில பி சென்டர்களில் மட்டும் வெளியாகும் .ஒரு சென்டரில் அதிக பட்சமாக பனிரெண்டு அல்லது பதினைந்து திரை அரங்குகளில் வெளியாகும் .சராசரி படம் வெளியானால் கூட எல்லா திரை அரங்குகளிலும் கூட்டம் இருக்கும் .படம் ஐம்பது நாட்கள் ஓடிவிட்டால் அதன் பிறகுதான் பி சென்டருக்கு படம் வரும் .படம் வெளியாகி ஆறுமாதங்கள் கழித்தே கிராமப்புற திரை அரங்கை தொடும் .ஆறு மாதம் கழித்து கிராமத்திற்கு வரும் திரைப்படமே சில நேரங்களில் இருபது நாட்களை தாண்டி ஓடும்.இப்படி இருக்கும்போது இப்ப வெளியாகி மூன்றாவது நாளே படம் மிகப்பெரிய வெற்றி என சொல்லபடுகிறது .



பில்லா ரெண்டு திரைப்படம் உலகம் முழுவதும் ஏறக்குறைய ஆயிரம் திரை அரங்குகளில் வெளியாரும் .மூன்று நாட்கள் திரை அரங்குகள் நிரம்பி ஓடினாலே போட்ட அனைத்து முதலும் எடுத்து விடுவார்கள் .அப்ப படம் வெற்றிதானே .

நான் இதை வெற்றி என சொல்லமாட்டேன் .அதிகப்படியான விளம்பரங்கள் செய்து படம் வெளியாகும்போதே பார்த்தால்தான் சிறப்பு என்பதுபோல ஒவ்வொருவரையும் மூளை சலவை செய்து திரைஅரங்கில் குவிய வைக்கிறார்கள் .




முன்பு படம் வெளியாகும்போது படம் சரி இல்லை என்றால் சராசரியான கூட்டம் கூடும் .சில நாட்களில் படம் தூக்கப்பட்டு விடும் .சில நேரங்களில் படம் வெளியாகி ஒரு வாரம் வரை திரை அரங்கில் கூட்டமே இருக்காது .படம் பார்த்த ஆட்கள் படம் நன்றாக இருக்கிறது என சொன்னால் வாய்மொழியாக கேட்டு கேட்டு மிகபெரிய வெற்றி அடைந்து இருக்கிறது .ஒரு தலை ராகம் ,சேது ,அஜீத் நடித்த காதல் கோட்டை போன்ற படங்கள் .இப்படி மக்கள் பார்த்து சொல்லி அதன் பிறகு நன்றாக ஓடிய படங்கள் .

இதே போல மிக நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான முதல் நாளை விட ரெண்டாவது நாள் அதிகப்படியாக கூட்டம் கூடிய திரைப்படம் நான் ஈ .காரணம் முதல் நாள் பார்த்த அனைவருமே படம் நன்றாக இருக்கிறது என சொன்னதுதான் .படம் பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் ஒன்று சொன்னதுபோல எல்லோரும் நன்றாக இருக்கிறது என எழுதினார்கள் .பேஸ்புக்,ட்விட்டர் , ப்ளாக்கர் என எல்லா தளங்களிலும் படம் நன்றாக இருக்கிறது என சொன்னார்கள் .அப்ப நான் ஈ திரைப்படம் வெற்றிப்படம் தானே .

பில்லா ரெண்டு திரைப்படத்திற்கு நிறைய இடங்களில் முதல் மூன்று நாளைக்கு டிக்கெட் இல்லை என சொல்லபடுகிறது .சென்னை மாயாஜால் திரை அரங்கில் படம் வெளியாகும் அன்று எழுபத்து இரண்டு காட்சிகள் திரை இடப்படுகிறது என சொல்கிறார்கள் .இதை எல்லாம் பார்க்கும்போது படம் வெளியான மூன்றாவதுநாள் எந்திரன் திரைப்படத்தின் வசூல் சாதனையை பில்லா முறியடித்தது என கண்டிப்பாக விளம்பரம் வரும் .கண்டிப்பாக மிகபெரிய வசூல் சாதனையை கொடுக்கும் பில்லா .ஆனால் என்னை பொருத்தவரை இப்பொழுதே நான் சொல்கிறேன் விளம்பரங்களில் வைத்து ஒட்டப்படும் எந்தப்படமும் வெற்றிப்படம் இல்லை .அந்த வகையில் பில்லா ஒரு தோல்வி படமே

.எந்தவித அதிகபட்ச விளம்பரம் இல்லாமல் வந்து வாய்மொழியாக நல்லபடம் என சொல்லப்பட்டு இன்று வெற்றி அடைந்து இருக்கும் நான் ஈ மிகப்பெரிய வெற்றிபடமே

Monday 9 July 2012

நான் ஈ - என் பார்வையில் விமர்சனம்......



நான் நிறைய சினிமாக்கள் பார்ப்பவன் .மொழி புரியாத படத்தைக்கூட கடைசிவரை பார்ப்பேன் .அப்படித்தான் நேற்று நான் ஈ படத்தை மொழி மாற்று படம் என நினைத்து பார்த்தேன் .ஆனால் தமிழில் எடுத்துள்ளார்கள் .

இப்போ நான் எழுதுவது விமர்சனம் அல்ல .சராசரி சினிமா ரசிகனாய் இதை எழுதுகிறேன் .கடைசியில் சொல்வதை விட முதலிலேயே சொல்லி விடலாம் .குடும்பத்தோடு போய் பாருங்க இந்த படத்தை .நிச்சயம் பெரியவர்களையும் இளைஞர்களையும, குழந்தைகளையும் சந்தோசப்படுத்தும் இந்தப்படம் .

கதை படத்தின் தலைப்பை போலவே கொசு அளவே கதை .தன்னை கொன்றவனை மறுஜென்மம் ஈ உருவில் எடுத்து பழிவாங்குவதே கதை .


படம் ஆரம்பிக்கும்போதே வில்லனின் குணம் இதுதான் என முதல் காட்சியில் உணர்த்திவிடுகிறார் இயக்குனர் .வில்லன் சுதீப் மிக அற்புதமாக நடித்துள்ளார் .சுதிப்பை கதாநாயகன் எனக்கூட சொல்லலாம் .

நானி படம் ஆரம்பித்து முப்பத்து ஐந்து நிமிடங்களே வந்தாலும் சொல்லி அடித்து நடித்து இருக்கிறார் .துரு துரு வென இருக்கிறது அவரது அசைவும் நடிப்பும் .ஒன்றும் இல்லாமல் மொட்டையாக வரும் மெசேஜ்க்கு அவரது சந்தோசமும் நண்பன் கேட்கும் கேள்விக்கு சொல்லும் பதிலும் அட்டகாசம் .


சமந்தா...... இவரைப்பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை .திரையில் பார்த்த அவரது சிரிப்பு இன்னும் மனசுக்குள்ளேயே இருக்கு .சமந்தா நடித்த சில படங்கள் தெலுங்கு மொழியில் பார்த்து இருக்கிறேன் .அவை ஒரு கதாநாயகி என்ன செய்வாளோ அது போன்று நடித்து சென்று இருப்பார் .இந்த படத்தில் காட்சியின் தன்மை உணர்ந்து நடித்து உள்ளார் .அவர் முகத்தில் நானியை பார்க்கும்போதெல்லாம் ஏற்ப்படும் பரவசம் அவ்வளவு அழகா இருக்கும் .

சமந்தாவும் சுதிப்பும் சாப்பிடும்போது அவர் நானியை பார்க்கும் பார்வையில் ஒரு அழகு இருக்கும் .காதலிக்கும்போது ஏற்படும் வெட்கமும் பரவசமும் ஒரு பெண்ணுக்கு எப்படி ஏற்படுமே அதை அப்படியே திரையில் கொண்டு வந்து உள்ளார் சமந்தா .ஈ உருவில் இருப்பது நானிதான் என தெரிந்த பின்பு சமந்தாவும் ஈ யும் அசைவிலேயே உரையாடுவது சான்ஸே இல்லை வேறு யாரு நடித்து இருந்தாலும் இப்படி வந்து இருக்குமா என .சமந்தாவுக்கு இனி தமிழில் நல்ல எதிர்காலம் இருக்கிறது .


சிஜி யில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாக ஈ  இருந்ததாலும்கூட அது செய்யும் அட்டகாசங்கள் சிரிப்பையும் வியப்பையும் ஏற்ப்படுத்துகிறது .நானி  ஈ உருவம் அடைந்தவுடன் சிறுவர்கள் விளையாடும்போது பறக்கும் நுரை முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து விளையாடும்போதே நமக்கும் பரவசம் பற்றிக்கொள்கிறது .சுதிப்பை முதன்முதலில் பார்த்த உடனே சிறு பிள்ளைகள் கோபப்பட்டு அடிக்க வருவதுபோல இருக்கும் ஈ யின் செய்கைகள். 

சுதிப் கன்னத்தில் மோதி தொப்பென்று கீழே விழும் .மறுபடி மறுபடி முயன்று பச்சை இலை தேநீர் கிண்ணத்துக்குள் விழுந்து தண்ணீர் சுழலுக்குள் மாட்டி மயக்கநிலைக்கு போகும்போது தன்னை கொன்றது நினைவுக்கு வந்து சிலிர்த்து எழும் பாருங்க உங்களுக்கே விசில் அடிக்க தோன்றும் .இதுக்கு மேலே சொல்ல கூடாது திரையில் பாருங்க ஈ யின் அட்டகாசத்தை .


இயக்குனர் ராஜமௌலி ஒரு வரி கதையை வைத்துக்கொண்டு மிக கடுமையாக உழைத்து இருக்கிறார் .
வசனம் கிரேசிமோகன் நீண்ட நாட்களுக்கு பின்பு எழுதி இருக்கிறார் .அவரது எடக்கு மடக்கு பாணி வசனங்கள் ,நானி பேசும் வசனங்கள் எல்லாமே அருமை .

ஒளிப்பதிவு அருமை .பின்னணி இசை அருமை .மொத்தத்தில் படம் அருமை .இந்தியாவில் முழுமையாக கிராபிக்ஸ் செய்து வந்த படத்தில் இது மிக அருமை .

முன்பே சொன்னதுதான் .குடும்பத்தோடு போய் பாருங்க .குழந்தைகளோடு போய் பாருங்க இந்த படத்தை

Wednesday 4 July 2012

கிராமத்து ஆலமரம்............




எல்லா கிராமங்களிளிலும் ஊரின் மத்தியிலோ அல்லது ஒதுக்குபுறத்திலோ ஒரு ஆலமரமேனும் இருக்கும் .ஆலமரம் அதன் இடத்தில் இருந்துகொண்டு எத்தனை பேரின் வாழ்வை பார்த்துகொண்டு இருக்கிறது .சில ஆலமரங்களுக்கு கொஞ்சம் விசேஷமும் இருக்கும் .ஊரின் எல்லை தெய்வங்களில் ஒன்று அங்கே இருக்கு என கிராமத்தினர் நம்பவும் செய்வர் .அது காளியாகவோ முனியாகவோ அல்லது கறுப்பர் ,வீரபத்திரரராகவோ இருக்ககூடும் .அப்படி இருப்பின் அந்த ஆலமரத்தின் அடியில் சிறு மண்மேடு செய்து அதில் கம்பு வளைத்து ஊன்றி அதில் மாலைகளும் தொங்கி கொண்டு இருக்கும் .


என் ஊரிலும் ஒரு ஆலமரம் உண்டு .என் மீசை முளைக்கும் முன்பு அனேக நாட்கள் அந்த ஆலமரமே எடுத்துக்கொண்டது .இந்த ஆலமரத்தின் அடியிலும் ஒரு காளி இருக்கு என இன்னும் கும்பிட்டுகொண்டுதான் இருக்கின்றனர் .நானும், சங்கரும் ,சாகுலும் ,குமாரும் இன்னும் சிலரும் பள்ளிக்கூடம் விட்டவுடன் இங்கேதான் இருப்போம் சங்கர் இன்று இவ்வுலகில் இல்லை தரையில் ஓடி பிடித்து விளையாடுவதை நாங்கள் ஆலமரத்தில் கிளைகளில் தாவி விளையாடிக்கொண்டு இருந்தோம் .அங்கே குரங்குகள் இருந்து இருப்பின் எங்களோடு போட்டிபோட பயந்து ஓடி இருக்கும் .


ஆலமரம் தான் காதலித்து கட்டிக்கொண்டது போல தன்னுள்ளே ஒரு பனை மரத்தையும் சேர்த்து வைத்து இருந்தது .சாரையும் நல்லபாம்பும் பிணைந்து இருப்பது போல...
இளம் மனைவியை இறுக கட்டி அணைத்து இருப்பதுபோல இருக்கும் ஆலமரத்தில் நடுவில் பனைமரம் இருப்பது .ஆலமரம் பனைமரத்திற்கு தாலி கட்டிக்கொண்டு இருப்பது போன்று இரண்டையும் ஆதண்டகொடிகள் பிணைத்து இருக்கும் [ஆதண்ட வத்தல் செய்யும் காய் ]முட்கள் நிறைந்த ஆதண்ட கொடிக்குள் பச்சைநிறத்தில் சிறு சிறு காய்கள் இருக்கும் .அதை போட்டிபோட்டு பறிக்கும்போது முட்கள் உடம்பை பதம் பார்க்கும் .காய் யார் அதிகமாக பறிப்பது என்கிற ஆர்வத்தில் முட்கள் குத்தி வலிப்பது மறந்து இருப்போம் .சங்கர் பறிக்கும் காய்களை எனக்கோ அல்லது சாகுலுக்கோ அனைத்தையும் கொடுத்து விடுவான் .சங்கருக்கு சுண்டுவிரலும் அதன் அருகில் இருக்கும் விரலும் ஒட்டி இருக்கும் .


ஆலம்பழம் பழுக்கும் காலங்களில் மைனாக்களும் குருவிகளும் ஆலமரத்தில் நிறைய வந்து அமர்ந்து பழம் கொத்தி தின்றுகொண்டு இருக்கும் .மைனாக்கள் சத்தம் ஏதோ சந்தோசமாக அவை பாட்டு பாடிக்கொண்டு இருப்பதுபோல இருக்கும் .நாங்களும் ஆலம்பழம் சாப்பிடுவோம்


 .மைனா கொத்திய பழமாக தேடி சாப்பிடுவோம் .ஆலம்பழம் ருசி புளிப்பும் இனிப்பும் சேர்ந்த கலவையில் இருக்கும் .பழத்தின் தோலை உரித்து விட்டு அதன் உள்ளே இருக்கும் சிறு விதைகளை நீக்கிவிட்டு சாப்பிடுவோம் .



ஆலமரத்தின் கீழே விவசாய இடங்களுக்கு போகும் வண்டிபாதை செல்லும் .ஒவ்வொரு நாளும் இதன் கீழே நெல் அறுவடை காலங்களில் நெல் கதிர் வண்டிகளும் ,கடலை பறிக்கும் காலங்களில் கடலை வண்டிகளும் எள் அறுவடையின் போது எள் கட்டுக்கள் ஏற்றிய வண்டிகளும் வருடத்தின் எல்லா நாட்களிலும் ஏதோ ஒரு மாட்டுவண்டி கடந்துகொண்டே இருக்கும் ஆலமரத்தை .


ஆலமரத்தின் கீழேதான் முருகன் ,சித்திரவேலு ,சேக்தாவுது இன்னும் நிறைய பேர் காசு கட்டி ஏட்டுக்காசு விளையாடுவார்கள் .இரண்டு ஒற்றை ரூபாய் நாணயங்களை ஒட்டி வைத்து மேலே எறிவார்கள்.கீழே விழும்போது பூவா தலையா கேட்பார்கள் .யார் கேட்டது சரியாக விழுகிறதோ அவர்களுக்கு காசு .நாங்கள் சிறுவர்கள் அவர்கள் விளையாடுவதை பார்த்துகொண்டு இருப்போம் .போக போக சைடு மாஸ் கட்ட ஆரம்பித்துவிட்டோம் .ஆனால் எங்களை நேரடியாக ஏட்டுக்காசு எரியவிடமாட்டார்கள் .இதையும் ஆலமரம் பார்த்துக்கொண்டே இருக்கும் .




இதே ஆலமரத்தின் கீழேதான் (நான் சீட்டு விளையாட கற்றுக்கொண்ட பின்பு) முப்பது ரூபாய் கட்டி ரம்மி விளையாடுவோம் .காலையில் சாப்பிட்டுவிட்டு சீட்டு விளையாடபோனால் என் அம்மா மதிய சாப்பாடு சாப்பிட திட்டிக்கொண்டே கூப்பிட வரும்போதுதான் தெரியும் மணி மூன்றை தாண்டி ஓடிக்கொண்டு இருப்பது .
சில தினங்களில் ஆலமரத்தின் கீழே சாராயம் குடித்து தீர்ந்த பிளாஸ்டிக் பைகளும் சிதறி கிடக்கும் .இரவுகளில் குடித்து கதை பேசியவர்களும் இருந்தார்கள் ஆலமரத்தின் கீழே .
சில நேரங்களில் ஆலமரத்தின் கீழே வீசும் இனிய காற்றுக்காக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்போம் .அப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது  யாரவது ஆலமரத்தின் கீழே இருக்கும் காளியை கும்பிட்டுவிட்டு தேங்காய் வெல்லம் கலந்த ஊறவைத்த அரிசி வாழை இலையில் வைத்து கொடுப்பார்கள் .அதை வாங்கி தின்றுகொண்டே பேசிக்கொண்டு இருப்போம் .


எனக்கு விவரம் தெரியும்போதே ஆலமரத்தை பழைய மரம் என சொல்வார்கள் .இன்று நான் நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கிறேன் .இன்னும் அந்த ஆலமரம் இருக்கு .ஆனால் அங்கே சிறுவர்கள் விளையாடுவதோ இல்லை பெரியவர்கள் காற்றுவாங்க அமர்ந்து பேசுவதோ இல்லை .யாருமற்று தனிமையாக ஆலமரம் இருக்கு .மாட்டுவண்டி கடந்த பாதையில் இன்று ட்ராக்டர்கள் கடக்கின்றன ஆலமரத்தை .எனக்கு முன்பு ஒரு தலைமுறை பார்த்து நான் பார்த்து வளர்ந்து என் மகனும் இருபதுகளில் இன்று வளர்ந்து நிற்கிறான் .எல்லாம் பார்த்த ஆலமரம் இன்று தனிமையாக இருப்பதாய் உணர்கிறேன் நான்.


Monday 2 July 2012

நானும், மாடர்ன் ஆர்ட்டும்


 நான் வரைந்த ஓவியம்......எப்படி இருக்கு நண்பர்களே?.....